கேரள மாநிலத்தில் சி.பி.எம் கட்சி 2021 சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை சி.பி.எம் கூட்டணி கைப்பற்றியதால், பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வரானார். இடுக்கி மாவட்டம், தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் ஏ.ராஜா வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி.குமாரைவிட 7,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஏ.ராஜா வென்றார். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஏ.ராஜா பதவியேற்பின்போது தமிழில் உறுதிமொழி வாசித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில், தனித் தொகுதியான தேவிக்குளத்தில் தான் கிறிஸ்தவர் என்பதை மறைத்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து ஏ.ராஜா போட்டியிட்டதாகவும், அதனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரியும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.குமார் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஏ.ராஜாவின் தந்தை ஆன்றணியும், அவருடைய தாய் எஸ்தரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவருடைய தாயின் இறுதிச்சடங்கு சர்ச்சில் வைத்து நடைபெற்றது எனவும், ஏ.ராஜாவும் கிறிஸ்தவ சபையின் அங்கமாக இருப்பதாகவும் டி.குமார் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், ராஜாவின் மனைவி, பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் டி.குமார் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது சி.எஸ்.ஐ சபையின் குடும்பப் பதிவேடு, தகனப்பதிவேடு உள்ளிட்டவற்றை கோர்ட் ஆய்வுசெய்தது. இதைத் தொடர்ந்து இன்று அளித்த தீர்ப்பில், “ஏ.ராஜா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. எனவே, அவர் தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது” என ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. கேரள சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சி.பி.எம் மற்றும் ஏ.ராஜா ஆகியோர் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.