ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம்
தனி ஒருவன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கிய நடிகர் அரவிந்த்சாமி, அதற்கு அடுத்ததாக போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம் என மளமளவென அவரது படங்கள் வெளியாகின. அதேசமயம் ஒரு கட்டத்தில் அவர் நிறைய படங்களில் நடித்தாலும் கூட, அவரது படங்கள் வெளியாவதற்கான இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகமானது. குறிப்பாக அவர் நடித்துள்ள படங்களில் கிட்டத்தட்ட நான்கு படங்கள் நீண்ட நாட்களாக ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இதில் நரகாசுரன் படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டு வருகிறது. இதேபோன்று சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய படங்களும் ரிலீஸாக முடியாத வகையில் வெவ்வேறு விதமான சிக்கல்களில் சிக்கி இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் செல்வா டைரக்சனில் புதையல் என்கிற படத்தில் நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது டைரக்சனில் ஆரம்பித்த வணங்காமுடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார் அரவிந்த்சாமி.
இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்திகா சிங், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்க, முக்கிய இடத்தில் நடிகைகள் சிம்ரன், சாந்தினி தமிழரசன், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அனேகமாக ரிலீசுக்கு காத்திருக்கும் அரவிந்த்சாமியின் படங்களில் இந்த வணங்காமுடி படம் இந்த வருடத்தில் எப்படியும் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.