கேம் விளையாடிய மகனுக்கு தண்டனை| Punishment for son who played game

பீஜிங்,: சீனாவில் நள்ளிரவு வரை உறங்காமல் மொபைல் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய, 11 வயது மகனுக்கு, அவனது தந்தை வழங்கிய நுாதன தண்டனை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நம் அண்டை நாடான சீனாவின் குவாங்க்டங் மாகாணத்தில் வசிப்பவர் ஹுவாங். இவரது 11 வயது மகன், தினமும் நள்ளிரவு வரை உறங்காமல் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடியதை பார்த்துள்ளார்.இதையடுத்து, தன் மகன் மீண்டும் விளையாடாமல் இருக்கவும், இந்த விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை புரியவைக்கவும் அவனை தொடர்ச்சியாக விளையாட உத்தரவிட்டார்.

நள்ளிரவு முடிந்து, மறுநாள் காலை வரை தொடர்ந்து விளையாடிய சிறுவன், ஒரு கட்டத்தில் களைப்படைய துவங்கினான்.

ஆனால், ஹுவாங் அவனை துாங்க விடவில்லை. இப்படி தொடர்ச்சியாக 17 மணி நேரம் விளையாடிய சிறுவன், உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தான்.

இதையடுத்து, தன் தவறை உணர்ந்த அவன் மன்னிப்பு கடிதம் எழுதினான்.

இதில், ‘நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாடிய எனக்கு என் தந்தை தண்டனை தந்து விட்டார். இனி இரவு 11:00 மணிக்குள் உறங்க செல்வேன்; அதற்கு முன் மொபைல் கேம் விளையாட மாட்டேன்’ என குறிப்பிட்டுள்ளான்.

இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஹுவாங், ‘இந்த வழிமுறை பலனளிக்கக்கூடியது தான்; ஆனால், பெற்றோர் இதை பின்பற்ற வேண்டாம்’ என குறிப்பிட்டார்.இதைப் பார்த்த ஒரு சிலர் ஹுவாங் மகனுக்கு கடுமையான தண்டனை வழங்கியதாகவும், வேறு சிலர் உரிய முறையில் பாடம் புகட்டியதாகவும் விமர்சித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.