மாஸ்கோ,-சீன அதிபர் ஷீ ஜின்பிங், மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று ரஷ்யா வந்தடைந்தார். அவருக்கு, கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உற்சாக வரவேற்பு அளித்தார்.
கிழக்கு ஐரோப்பியா நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 13 மாதங்கள் ஆகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இதையடுத்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து அதை தனிமைப்படுத்தி உள்ளன.
இது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதோடு, போர் குற்றங்களுக்காக, அவருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் கைது வாரன்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங், மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று ரஷ்யா வந்தடைந்தார். அவருக்கு மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புடின் உற்சாக வரவேற்பு அளித்தார்.
‘இந்த சந்திப்பு, எல்லையில்லா தங்கள் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்’ என, இருநாட்டு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சீன அதிபரின் இந்த பயணம் வாயிலாக, உலக அரங்கில் இழந்த தங்கள் மரியாதையை மீட்டெடுக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
எனவே தான் ஜின்பிங்கின் இந்த வருகை தங்களுக்கு மிகப்பெரிய கவுரவம் என்று புடின் தெரிவித்துள்ளார். ”எங்களை பலவீனப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இரு நாடுகளுமே தயாராக இல்லை என்ற செய்தியை, எங்கள் சந்திப்பு அமெரிக்காவுக்கு உணர்த்தும்,” என, புடின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றும், நாளையும் இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் மீதான போரை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்