புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலமாகவும் உத்தரவாதம் அளித்திருந்தது. இந்நிலையில் சம்யுக்தா கிசன் மோர்சா சார்பாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். பல்வேறு வண்ணங்களில் தலைப்பாகை அணிந்தபடி அவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசு தங்களுக்கு அளித்த எழுத்துபூர்வமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளன.