திருப்பூர் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனையில் தாய் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில் போலீசார் உயிரிழந்து கிடந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்துகிடந்தவர்கள் திருப்பூர் மாவட்டம் பவலந்தான்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி தனலட்சுமி (32) மற்றும் அவரது மகள் தட்சணா(15) என்பது தெரியவந்தது. மேலும் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மன வேதனையடைந்த தனலட்சுமி, மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.