உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், இருசக்கர வாகன பிரசாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இப்பிரசாரத்தினை மாவட்ட செயலாளர் நேரு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்த வேண்டும். ஒன்றிய அரசு சிறு, குறு மற்றும் மத்திய தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, இருசக்கர வாகன பிரச்சரம் நடைபெற்றது. இந்த இருசக்கர வாகன பிரசாரம் உத்திரமேரூர் பஜார் வீதியில் துவங்கி வேடபாளையம், காட்டுப்பாக்கம், மேனல்லூர், அரசாணிமங்கலம், பென்னலூர், அம்மையப்பநல்லூர், களியாம்பூண்டி, அழிசூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கம் தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.