திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித் தொகுதியாகும். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு 7,848 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தோல்வியடைந்த காங். கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தேவிகுளம் சட்டமன்ற தொகுதி ஒரு தனித் தொகுதி ஆகும். இந்து மதத்தை சேர்ந்த எஸ்.சி. பிரிவினர் மட்டுமே இந்த தொகுதியில் போட்டியிட முடியும்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாவின் தந்தை அந்தோணியும், தாய் எஸ்தரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். ராஜாவின் மனைவி ஷைனி பிரியாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். அவர்களது திருமணம் கிறிஸ்தவ மத முறைப்படித் தான் நடந்தது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.