இடுக்கி: கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியிட்டதாக கேரள மாநிலம் தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ-வின் வெற்றியை ரத்துசெய்துள்ளது அம்மாநில உயர் நீதிமன்றம்.
கடந்த 2021ம் ஆண்டு கேரளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் சி.பி.எம் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. அதில் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தனி தொகுதியில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார்.
தமிழரான இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி.குமாரைவிட 7,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார். தொடர்ந்து தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஏ.ராஜா சட்டசபையில் பதவியேற்பின்போது தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டது அப்போது வைரலானது.
இதனிடையே, தனித் தொகுதியான தேவிகுளத்தில் ராஜா கிறிஸ்தவர் என்பதை மறைத்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
காங்கிரஸின் டி.குமார் தனது மனுவில், “கிறிஸ்தவ பெற்றோர் ஆண்டனி மற்றும் எஸ்தர் ஆகியோருக்கு பிறந்த ராஜா, எப்போதும் கிறிஸ்தவராகவே வாழ்ந்துள்ளார். ராஜா ஒரு தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றவர், ராஜாவின் மனைவி ஷைனிப்ரியாவும் ஒரு கிறிஸ்தவர், அவர்களின் திருமணம் கிறிஸ்தவ நம்பிக்கையின்படி நடந்தது” எனக் கூறி ராஜா மற்றும் ஷைனிப்ரியாவின் திருமண புகைப்படத்தை நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்தார்.
இந்த ஆதாரங்களுடன் தேவாலயத்தின் குடும்பப் பதிவேடு, தகனப்பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்த கேரள உயர் நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், “ராஜா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் கிடையாது. எனவே, அவர் தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது” என உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து ராஜா மேல்முறையீடு: இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராஜாவுக்கு சிபிஎம் மாநிலக் குழு அனுமதி அளித்துள்ளது. இதேபோன்ற சில வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் இருந்து சாதகமான நிலைப்பாடு கிடைத்திருப்பதால் நம்பிக்கை இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் எல்லையான இடுக்கி மாவட்டத்தில் உள்ளது தேவிகுளம். இது சிபிஎம் கட்சியின் கோட்டை. மொத்த வாக்காளர்களில் தமிழர்கள் மட்டுமே 62 சதவிகிதம் வசிக்கின்றனர். தமிழர்களே நீண்ட காலமாகவே தேவிகுளத்தை கேரள மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிபிஎம் தலைவர்களில் ஒருவரான ராஜேந்திரன், 2006 முதல் மூன்று முறை தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால், கடந்த தேர்தலில் ராஜேந்திரனை ஓரங்கட்டிவிட்டு ராஜாவை சிபிஎம் கட்சி தேர்ந்தெடுத்தது.
தேவிகுளம் வரலாறு: கேரள சட்டசபை வரலாற்றில் நீதிமன்ற தலையீட்டால் உறுப்பினர் ஒருவர் முதல்முறையாக பதவி இழந்த நிகழ்ந்தது இதே தேவிகுளம் தொகுதியில் இருந்துதான். 1957 ஆம் ஆண்டில், தேவிகுளத்தில் இருந்து ரோசம்மா புன்னூஸ் கேரள சட்டமன்றத்தின் முதல் உறுப்பினராகப் பதவியேற்று கொண்டார். ஆனால், தனது வேட்புமனுவை சட்ட விரோதமாக நிராகரித்ததாகக் கூறி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பி.கே.நாயர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இதனால் கேரளாவின் முதல் இடைத்தேர்தல் 1958ல் தேவிகுளத்தில்தான் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ரோசம்மா புன்னூஸே வெற்றிபெற்றார் என்பது வரலாறு. இப்போதும் அதேபோன்றொரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.