முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர், ஃபேஸ்புக், அமேசான், கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் விதிவிலக்கல்ல. அமேசான் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாஸி அடுத்த சில வாரங்களில் மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர், “சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளின்போது இந்த ஆட்குறைப்பு பற்றி ஏன் அறிவிக்கவில்லை என்று சிலர் கேட்கலாம். அதற்கான சுருக்கமான பதில் என்னவென்றால், ‘சமீபத்திய மதிப்பீட்டின்போது சில அணிகள் சிறப்பாக செயல்படவில்லை என்று எங்களுக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்போம்’ ” என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், நீக்கப்படபோகும் ஊழியர்கள் பெரும்பாலும் விளம்பரப் பிரிவு, வெப் சர்வீஸ் பிரிவு, வீடியோ கேம் பிரிவு மற்றும் அவைசார்ந்த சில பிரிவுகளில் பணியாற்றுபவர்களாகவே இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம், கடந்த வாரம் 10,000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்ததோடு, 5,000 காலிப் பணியிடங்களை நிரப்பும் ஏற்பாடுகளையும் திரும்பப் பெற்றது. இதேபோல கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை ஜனவரியில் பணி நீக்கம் செய்தது. இந்த வரிசையில் மீண்டும் அமேசான் நிறுவனம் தற்போது இடம் பிடித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM