அதிமுகவில் சட்டப் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது.
,
இடையில் பல கட்டங்களாக மோதல் நடந்து வருகிறது. இதில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக் கூடாது. அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முன்வந்துள்ளது.
பொதுக்குழு வழக்கு
ஏற்கனவே ஜூலை 11, 2022 பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா? என சென்னை முதல் டெல்லி வரை நீதிமன்றத்தின் கதவுகளை மாறி மாறி தட்டினர். கடைசியில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழமை நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் தான் தற்போது சூடுபிடித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பொதுச் செயலாளர் தேர்தல் விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கிடுக்குப்பிடி போட்டது. உடனே பிரதான வழக்கை முடித்து விட்டு வருகிறோம். அதில் தீர்ப்பு வந்தால் அடுத்தடுத்த வழக்குகள் அடிபட்டு போய்விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மார்ச் 24ல் தீர்ப்பு
பிரதான வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 22ல் விசாரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் தெலுங்கு வருடப் பிறப்பு. இதனால் நீதிமன்றங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும். இருப்பினும் அதிமுக விவகாரத்தில் தலைமை நீதிபதியின் சிறப்பு அனுமதி பெற்று விடுமுறை நாளிலும் வழக்கை நடத்த நீதிபதி முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்குவது உறுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவித்து கொள்வதில் பிரச்சினையில்லை. இந்த தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இரண்டு வாய்ப்புகள் தான். எடப்பாடிக்கு சாதகமாக மாற வேண்டும். இல்லையெனில் ஓபிஎஸ்க்கு சாதகமாக வர வேண்டும். எடப்பாடி பக்கம் தீர்ப்பு வந்தால் சலசலப்புகள் அனைத்தும் மொத்தமாக ஓவர்.
தீர்மானங்கள் செல்லும்
அதாவது, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வந்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லுபடியாகும். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்ததும் ஏற்கப்படும். இந்த பதவி அடுத்த 6 மாதங்களில் காலாவதியானதை மறந்துவிடக் கூடாது. இருப்பினும் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகள் தயாராக இருக்கிறது.
எடப்பாடி தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமருவார் என்பது உடனடியாக முடிவு செய்யப்பட்டு விடும். ஒருவேளை அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டால் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆறுதலாக அமையலாம். ஆனால் அடுத்தகட்டமாக பொதுக்குழுவை கூட்டி முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஓபிஎஸ் என்ன செய்வார்?
அதற்கு ஓபிஎஸ் தரப்பில் எத்தனை பேர் பொதுக்குழுவில் ஆதரவாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறியாக முன்வந்து நிற்கிறது. எடப்பாடி பக்கம் தான் பொதுக்குழு உறுப்பினர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவாக நிற்கின்றனர். இதனால் அவருக்கு சாதகமாக தீர்மானங்களை நிறைவேற்றி மீண்டும் ஓபிஎஸ் நீக்கம், பொதுச் செயலாளர் எடப்பாடி என அதிரடிகள் அரங்கேறும்.
இவ்வாறு தீர்ப்பு எப்படி வந்தாலும் எடப்பாடிக்கு சாதகமாகவே இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதன்பிறகு தேர்தல் ஆணையம் என்ன சொல்லப் போகிறது என்ற விஷயம் இருக்கிறது. டெல்லியின் தயவில்லாமல் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியாது என்றும், வரும் 2024 மக்களவை தேர்தலுக்குள் தீர்வு கிடைக்குமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.