உள்நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்களுக்கு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தபால் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளதாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சையதுபாபு என்பவர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உள்நோயாளிகளாக உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் என்ற வகையில் சுமார் 5 லட்சம் பேர் மருத்துவமனையை விட்டு வர முடியாத சூழலில் உள்ளனர். இதேபோல் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 லட்சம் பேரில், பெரும்பாலானோர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் கல்வி கற்பவர்களாக உள்ளனர். அதனால், ஒருநாள் விடுமுறையைப் பயன்படுத்தி ஊருக்கு வந்து வாக்களித்துவிட்டுத் திரும்புவது அவர்களுக்கு சாத்தியமற்றதாக உள்ளது.
இந்தக் காரணங்களால் இந்தியா முழுவதும் 10 கோடி பேர் வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கும் தபால் வாக்குரிமை அளிக்க வேண்டும்” என அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அண்மையில் அனுப்பிய பதில் கடிதத்தில், “கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு தபால் வாக்குரிமை அளிக்கக்கோரிய மனு மீது உரிய பரிசீலனை மேற்கொள்ள தேர்தல் ஆணையச் செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளோம்” என்றுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM