தமிழகத்தில், பெருமளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ. 1000 உரிமைத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கயிருப்பதாகவும், அதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கயிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஈரோடு இடைத்தேர்தலில் பரப்புரையின்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்குப் பேருந்தில் இலவசம் என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் பெண்கள் பலர் பயனடைந்திருக்கின்றனர். தற்போது, வாக்குறுதியாக அளித்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 திட்டமும் வரும் மார்ச் மாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் இடம்பெறும்” என அறிவித்தார்.
முன்னதாக இந்தத் திட்டம், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் மாதம் 3-ம் தேதி தொடங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன் அறிவிப்பு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போய் உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்டார் நிதி அமைச்சர். இதில் தகுதி வாய்ந்த பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர், “சமூக ரீதியலாக பெண்களை உயர்த்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் ஆட்சி. மகளிருக்கான சொத்துரிமை தொடங்கி உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு, பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் எனப் பெண்கள் உரிமையை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய அரசால் அதிகரித்திருக்கும் எரிவாயு சிலிண்டர் விலை, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிப்பது பேரூதவியாக இருக்கும். எனவே, இதற்கு அதீத தேவையுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் சென்றடையும்” எனப் பேசினார்.
இதில், ’யாரெல்லாம் தகுதியானவர்கள்’ என்பதை அரசு தரவுகளைக் கொண்டு நிர்ணியம் செய்வதற்கு அதிக கால தாமதம் ஆகியுள்ளது. குறிப்பாக, இதற்கான நிபந்தனைகளாக ஆண்டு வருமானம், குடும்பத்தில் அரசு வேலையில் இல்லாதவர்கள், சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கக் கூடாது, வருமான வரி செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு என லிஸ்ட் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட அந்தப் பணிகள் முடியும் தருவாயில் தான் இருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கை எல்லாம் பயனாளர்களைக் குறைக்கும் நடவடிக்கை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அரசு ஒதுக்கியிருக்கும் நிதி.
அரசு ஒதுக்கியிருக்கும் நிதிப்படி செப்டம்பர் முதல் அடுத்த நிதியாண்டு மார்ச் வரையிலான 7 மாதங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1000 தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு கோடிக்கும் கீழ்யுள்ளவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்பது உறுதியாகிறது. இதனால், திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் திட்டம் கிடையாது. மிகவும் அவசியம் உள்ளவர்களுக்கு மட்டும் நிதி உதவி அளிக்கப்படும்.
இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்லிவிட்டு, 2 கோடி குடும்பங்களுக்கும் மேல் உள்ள தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்வது மக்கள் ஏமாளிகள் என்ற எண்ணத்தில் தானே?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், ”இந்தப் பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்பாக இருப்பது காலை சிற்றுண்டி திட்டமும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகையும் தான். குடும்பத் தலைவிக்காக பயனாளர்கள் யார் என்பது தொடக்கம் முதலே எழுந்த கேள்விதான். அதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருந்தாலும், ஒதுக்கியிருக்கும் நிதியை வைத்து பார்க்கும் போது இதன் பயனாளர்கள் 1 கோடிக்கு கீழ் தான் இருப்பார்கள். பொதுவாக தேர்தலுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பைத் திட்டமாக செயல்படுத்தும் போதுஅதற்கு சில வழிமுறைகளையும், நிபந்தனைகளையும் முன்வைப்பது இயல்புதான். ஆனால், அனைவருக்கும் உரிமைத்தொகை என அறிவித்துவிட்டு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தருவது விமர்சனத்தை உண்டாக்கும். ஆனால், இதை திமுக அரசு தன் தேர்தல் அறிக்கையில் தொலைநோக்குத் திட்டமாகத் தான் அறிவித்திருக்கிறது. இதனால், அப்படியான விமர்சம் எழும்போது இதைப் படிப்படியாகக் கொண்டுவர திட்டமிட்டிருக்கும் என திமுக சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
முன்னதாக தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைய வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் இந்தத் திட்டத்தால் பயன்பெற முடியாது. மற்றவர்களுக்கான வரையறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த நிதியாண்டில் 6 மாதங்களே உள்ளதால், திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.