மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 230 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ளது.
எதிர்வரும் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பெண் வாக்காளர்களை கவர போட்டி போட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவி தொகை வழங்கும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதற்காக அண்மையில் தாக்கல் செய்த அம்மாநில பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில், எதிர்வரும் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவி தொகையும், ரூ.500க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.