பழநி, திருத்தணி, சமயபுரம் கோயில்களில் ரூ.485 கோடியில் பெருந்திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து4,491 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட, ரூ.4,236 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
கோயில் நிலங்களின் புவிசார் ஒருங்கிணைப்புகளை பதிவு செய்யவும், நில வளங்கள் பற்றிய தரவுத் தளத்தைதயாரிப்பதற்கும் தனி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1,08,000 ஏக்கரில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நடப்பாண்டில் 574 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. திருச்செந்தூர் கோயிலில் ரூ.305 கோடி, பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.166 கோடி, ராமேசுவவரம் ராமநாத சுவாமி கோயிலில் ரூ.146 கோடி செலவில் பெருந்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் நிதியாண்டில்400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். மேலும், பழநி, திருத்தணி, சமயபுரம்கோயில்களில் ரூ.485 கோடியில் பெருந்திட்டப் பணி மேற்கொள்ளப்படும்.
பள்ளிவாசல்கள், தர்காக்களைப் பழுது பார்க்கவும், சீரமைக்கவும் வழங்கப்படும் ஆண்டு மானியம் நடப்பு நிதியாண்டில் ரூ.6 கோடியில் இருந்து ரூ.10கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாகூர் தர்காவை சீரமைக்கஇவ்வாண்டில் ரூ.2 கோடி செலவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, தேவாலயங்களைப் பழுதுபார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வழங்கப்படும் மானியம் ரூ.6 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.
அந்த வகையில், தொன்மையான மதுரை புனித ஜார்ஜ் தேவாலயம், தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் தேவாலயம், சேலம் கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படும். கடந்த ஆண்டில் வக்ஃபு வாரியத்தின் ரூ.52 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வக்ஃப் வாரிய சொத்துகளுக்கான தரவுத்தளம் உருவாக்கப்படும்.
54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்: ரூ.2,783 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும்: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.2783 கோடி செலவில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படுகிறது.
மின்னல் வேகத்தில் மாறிவரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்க, ரூ.2,877 கோடியில் 77 அரசு ஐடிஐ-க்களை தலைசிறந்த திறன்மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அடுத்தகட்டமாக தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்துக்கு ஏற்ப அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டம் வரும் ஆண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்தில் ரூ.2,783 கோடி செலவில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சி அளிக்கவும், திறமையான பணியாளர்களை உருவாக்கவும் ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமைகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் பயிற்சி கட்டமைப்பை அதிகரிக்க தொழிற்சாலைகள் தொழில்பயிற்சி கூடங்களாக பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளிக்க தொழில்நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
தொழிற்சாலைகளில் திறன்பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.80 கோடியில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.