மதுரை: புலப்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி பாஜ நிர்வாகி பிரசாந்த் உம்ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளந்திரேயன் முன்பு ஆஜரானார்.
அப்போது நீதிபதி, இது போன்ற வீடியோக்கள் பதிவு செய்வதை பார்க்கும் போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் போலி வீடியோவால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் நிலவுகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தார். மேலும் இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இன்று நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான புலப்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நாள் தங்கி காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளார். இனி இதுபோன்ற அவதூறான செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்ப மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை மீறினால் முன்ஜாமின் தானாக ரத்தாகி விடும் என நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.