நீண்ட காலமாக இழுத்துக்கொண்டே இருந்த வட அயர்லாந்து பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் செய்த ஒப்பந்தம் மிகப்பெரிய வெற்றி என பாராட்டுக்களை பெற்ற நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்திற்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது.
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கு சரக்குகள் அனுப்புவதில் பிரச்சினை உருவானது.
இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் ஒன்றிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சம்மதிக்கவைத்தார் பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்.
அந்த ஒப்பந்தம் வட அயர்லாந்து பிரச்சினை விடயத்தில் மிகப்பெரும் வெற்றியாக பாராட்டுகள் பெற்றது.
Credit: Reuters
புதிய பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு
ஆனால், வட அயர்லாந்து தரப்பிலிருந்து அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஒப்பந்தம் நாளை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ள நிலையில், வட அயர்லாந்தின் The Democratic Unionist Party என்னும் கட்சி, ஒப்பந்தத்திற்கெதிராக ஒருமனதாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அயர்லாந்துக் குடியரசுடன் நிலப்பரப்பை பகிர்ந்துகொள்ளவேண்டியுள்ளதற்காக, வட அயர்லாந்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய விதிகள் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என அக்கட்சியினர் தெரிவித்துள்ளார்கள்.
ஒப்பந்தத்தில் இன்னும் பல மாற்றங்கள், விளக்கங்கள் தேவை என கூறுகிறார்கள் அவர்கள்.
ஆக, வட அயர்லாந்து தொடர்பிலான புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், வட அயர்லாந்திலிருந்து அதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதால், அது ரிஷியின் ஒப்பந்தத்திற்கு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.