இன்னும் சில நாட்களில் 16 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கவிருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் சார்ந்த பேச்சுகள் அனல் பறக்கத் தொடங்கிவிட்டன.
ரசிகர்கள் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், `தோனி இந்த சீசனோடு ஓய்வை அறிவிப்பாரா?’ என்பதுதான் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. முன்னாள் வீரர்கள் பலருமே கூட தோனியின் ஓய்வு அறிவிப்பைப் பற்றி பல கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
`தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என்றே தெரிகிறது. அதனால் இந்த சீசன் இதுவரை இல்லாத கொண்டாட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்போடு தோனி ஓய்வு பெறுவார்’ என மேத்யூ ஹேடன் கூறியிருக்கிறார். அதேநேரத்தில் ஷேன் வாட்சனோ ‘தோனியின் ஃபிட்னஸை பார்க்கையில் அவர் இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என நினைக்க முடியவில்லை. இன்னும் மூன்று நான்கு சீசன்களுக்கு அவர் ஆடக்கூடும்’ எனத் தெரிவித்திருக்கிறார். தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுவாரா மாட்டாரா?
சிஎஸ்கேக்கும் தோனிக்கும் இடையேயான பந்தத்தை தனியாக எழுதி விளக்கி தெரியப்படுத்த வேண்டிய தேவையெல்லாம் இல்லை. தோனி என்றால் சிஎஸ்கே. சிஎஸ்கே என்றால் தோனி. அவ்வளவுதான். இப்படிப்பட்ட சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வு பெறுவது பற்றிய பேச்சுகள் இப்போதல்ல மூன்று வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 2019 ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் தோல்விக்குப் பிறகு தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார். அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவிப்பை ஆகஸ்ட் 15, 2020 அன்று வெளியிட்டார். அப்போதிருந்தே தோனி ஐ.பி.எல் போட்டிகளிலும் ஓய்வு அறிவிப்பை விரைவில் வெளியிட்டுவிடுவாரோ எனும் எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கிவிட்டது.
அந்த 2020 இல்தான் கொரோனா காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் மொத்தமாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு மாற்றப்பட்டன. அந்த சீசன் சிஎஸ்கேவிற்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. தொடர் தோல்விகளைச் சந்தித்தது.
ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதல் முறையாக சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிபெறாமல் வெளியேறியது. தோனியுடைய கரியரிலுமே மோசமான ஐ.பி.எல் சீசனாக இது மாறியது. சில போட்டிகளில் பந்தை சரியாக கனெக்ட் செய்யவே தோனி சிரமப்பட்டார். சில போட்டிகளில் பயங்கரமாக Dehydrate ஆகி தடுமாறினார். தோனிக்கு வயதும் ஆகிவிட்டது. தோல்வியும் துரத்துகிறது. ஆக, தோனி இந்த சீசனோடு ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்த்த சூழலில்தான் தோனி ட்விஸ்ட் கொடுத்தார்.
அந்த சீசனின் கடைசி லீக் போட்டியில் டேனி மோரிசன் ‘நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்களா?’ என தோனியிடன் கேள்வியை வீச ‘Definitely Not’ என தோனி உறுதியாக கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
தோனியின் ஓய்வு பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் 2021 லும் தொடர்ந்தது. 2021 இல் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இரு பகுதியாக ஐ.பி.எல் போட்டிகள் நடந்திருந்தது. இந்த சீசனில் அப்படியே தலைகீழாக பெர்ஃபார்ம் செய்த சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சிஎஸ்கேவை தோனி மீண்டும் சாம்பியனாக்கிவிட்டார். அந்த வெற்றிக் களிப்பிலேயே தோனி ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதும் தோனி ட்விஸ்ட் கொடுத்தார். `அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்துதான் எந்த முடிவையும் எடுக்க முடியும்’ என தோனி மீண்டும் ரகசியம் காத்தார்.
வெற்றிக் கோப்பையுடன் சென்னையில் நடந்த விழா ஒன்றில் பேசிய தோனி ‘என்னுடைய கடைசிப் போட்டியை சென்னையில்தான் ஆடுவேன்’ எனக் கூறினார்.
2022 சீசன் சேப்பாக்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட போட்டிகள் அனைத்தும் மும்பையிலேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டது. மெகா ஏலமும் நெருங்கியது. மெகா ஏலம் சமயத்தில் தோனி இன்னொரு முக்கியமான முடிவை எடுத்தார். தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் தனக்கு முன்பாக முதலிடத்தை ஜடேஜாவிற்காக விட்டுக் கொடுத்தார். ஜடேஜாவிற்கு ரூ.16 கோடி சம்பளம். தோனிக்கு ரூ.12 கோடி சம்பளம். மேலும், சீசன் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பதவியிலிருந்தும் தோனி விலகினார். ஜடேஜா புதிய கேப்டனாக்கப்பட்டார். இதெல்லாம் சிஎஸ்கேவிலிருந்து தோனி தனது முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ள தொடங்கிவிட்டார் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது. ஆனால், சீசன் நடுவில் இன்னொரு ட்விஸ்ட் நடந்தது. ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே தொடர் தோல்விகளைச் சந்தித்தது. ஒரு கேப்டனாக ஜடேஜா முழுமையாக தலைமைப் பண்பை வெளிக்காட்ட முடியவில்லை.
`தலைமைப் பண்பை ஸ்பூனில் வைத்து ஊட்டிவிட முடியாது’ என ஜடேஜாவை கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்த தோனி மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டார். சேப்பாக்கத்தில் ஆடிவிட்டுதான் ஓய்வை அறிவிப்பேன் என தோனி உறுதியாக கூறியிருந்ததால் இந்த சீசனிலும் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் தோனியின் ஓய்வு அறிவிப்பு சார்ந்து இத்தனை விஷயங்களை கடந்து வந்திருக்கிறோம். தோனியின் லாஜிக்படி தோனி இந்த சீசனோடு ஓய்வுபெற வேண்டும். ஆனால், அப்படி ஓய்வு பெற்றுவிடுவாரா என்பதை 100% உறுதியாக யாராலும் கூற முடியாது. தோனியாலுமேகூட கூற முடியுமா என தெரியவில்லை. ஒருவேளை இந்த முறை சிஎஸ்கே கோப்பையை வென்றுவிட்டால் அந்த உற்சாகத்தோடே தோனி விடைபெறக்கூடும். இல்லையெனில் இன்னும் ஒரு சீசன் மட்டும் கடந்துவிட்டால் அடுத்து ஒரு மெகா ஏலமோ அல்லது வீரர்களை களைத்து மாற்ற ஏலம் போன்ற வேறெதோ ஒன்று நடக்கும் அத்தோடு ஓய்வு பெறலாம் என்று கூட நினைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேல் தோனி ஒரு வீரராக மட்டுமே பங்களிப்பை நல்கிய இந்திய அணியிலிருந்து அவர் நினைத்த மாத்திரத்தில் அவரால் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ஒதுங்க முடிந்தது. ஆனால்,
சிஎஸ்கேவில் தோனி ஒரு வீரர் மட்டுமில்லை. சிஎஸ்கே நிர்வாகமும் தோனியை ஒரு வீரராக மட்டுமே பார்க்கவில்லை. சிஎஸ்கேவில் தோனியின் பங்களிப்பு அதையும் தாண்டியது. அணியின் வணிகத்தை நிர்ணயம் செய்யக்கூடிய முகம் தோனியுடையது. அதை அத்தனை சீக்கிரத்தில் ஒதுங்க வைக்க எந்த நிர்வாகமும் முன் வராது. சிஎஸ்கேவும் அதற்கு விதிவிலக்கல்ல!
தோனி ஓய்வு அறிவிப்பாரா? என்பது குறித்த உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்!