கோவையில் மத்திய அரசின்கீழ் வேலை வாங்கித் தருவதாக தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு, இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பிரசாந்த் உத்தமன், Hindustan scout and giudes state chief commissinor பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர், ராஜேஷ் குமாரிடம் கோவை NSR சாலையில் உள்ள மத்திய அரசின் Hindustan Scouts and Guides-ல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 11,50,000 ரூபாயை பெற்றுக் கொண்டு பணி ஆணையை வழங்கியுள்ளார்.
அந்த பணி ஆணையுடன் ராஜேஷ்குமார் பணியில் சேரச் சென்றபோது, அது போலியான பணி ஆணை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேஷ்குமார் பணத்தை திருப்பித் தரும்படி பிரசாந்த் உத்தமனிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், இதுவரை பணத்தை திருப்பி அளிக்காத நிலையில் இது குறித்து ராஜேஷ்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பிரசாந்த் உத்தமன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரசாந்த் உத்தமன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்ற கார் மெக்கானிக் ஒருவரிடம் இதே வேலையை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சத்தை வாங்கிக் கொண்டு அவருக்கும் போலியான பணி ஆனையை வழங்கி மோசடியில் ஈடுப்பட்டதாக அதே சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அதிகாரியொருவரே, இப்படியான மோசடி வேலையில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM