தமிழ்நாடு பட்ஜெட் 2023: அரசு இதை மட்டும் கொஞ்சம் கவனமா பார்க்கணும்- கோரிக்கை வைத்த முத்தரசன்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசின் பட்ஜெட்டில் தேர்தல் நேரத்தில் அறிவித்த முக்கிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பெண்கள் நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்துக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் 2-வது கட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.7 ஆயிரத்து 145 கோடியில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள், கணினி தமிழ் மாநாடு, தஞ்சையில் சோழர் கால பொருட்கள் இடம்பெறும் அருங்காட்சியகம், அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும், கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பாராட்டுக்குரியது.

62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 30 ஆயிரம் கோடியாக குறைந்திருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமையை காட்டுகிறது.

மின்தேவை அதிகரிப்பால் தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனியார் பங்களிப்பு என்பது சலுகைகள் பறிபோகும் அபாயத்தை உருவாக்கும்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இதேபோல, மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மானிய கோரிக்கையின் போது இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர், “நாடாளுமன்றத்தை வழக்கமாக எதிர்க்கட்சியினர்தான் முடக்குவார்கள். ஆனால் ஆளும் கட்சியினரே இப்போது நாடாளுமன்ற கூட்டத்தை முடக்கி இருப்பது வியப்பாக உள்ளது” என்றார்.

“தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலர் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமானது. இதை கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர், அறக்கட்டளையாக பெயர் மாற்றி பதிவு செய்துள்ளனர். இந்த அலுவலக விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனவே, இதில் அந்த கட்சியினர் தலையிட கூடாது. இடதுசாரிகளின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்” என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.