தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று நடந்து வருகிறது. இந்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி,”இன்று தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது. தி.மு.க 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு ஆதார விலை ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தது.
கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் ரூ.195 தான் கரும்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக எந்த அறிவிப்பும் இதில் இல்லை. இது கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாகும்.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, இப்போது குவிண்டாலுக்கு தரங்களைப் பிரித்து 70 முதல் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறி, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.20,000 இழப்பீடாக அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்தோம். இந்தியாவில் அதிக அளவு விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தந்த அரசு அ.தி.மு.க அரசு.
ஆனால், தி.மு.க அரசு ரூ.13,500 தான் கொடுத்திருக்கிறார்கள். மேலும் விவசாயிகள் கட்டி வந்த காப்பீட்டு பிரிமியர் தொகை கூட திரும்பப் பெற முடியாத சூழல்தான் இப்போது நிலவுகிறது.
விவசாயிகள் நெல்லை விற்பதற்காகத் தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையத்துக்குக் கொண்டு வந்த நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த மூட்டைகள் மழையில் நனையாமலிருக்கத் தார்ப்பாய் கூட வழங்கவில்லை. அதனால் பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது.
சமீபத்தில் கூட கடலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதை இந்த அரசு கண்டு கொள்ளவேயில்லை.
தைப்பொங்கலைக் கருத்தில் கொண்டு கரும்பு விவசாயிகள் கரும்பை உற்பத்தி செய்வார்கள். ஆனால், கடந்த தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் கரும்பை வழங்காமல் இந்த அரசு நிறுத்தியது. உடனே நான் அரசின் முடிவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டேன். விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். அதன் பிறகுதான் குடும்ப அட்டைதாரர்களுக்குச் செங்கரும்பு வழங்கப்பட்டது.
மழை நீரைப் பாதுகாப்பதற்காகக் குடிமராமத்து திட்டத்தைக் கொண்டுவந்தோம். இதை அ.தி.மு.க அரசு கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அந்த திட்டத்தை தி.மு.க அரசு அப்படியே கைவிட்டு விட்டது. காவிரி குண்டாறு திட்டத்தையும் அ.தி.மு.க அரசு 700 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து, அந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தது. ஆனால் இந்த அரசு அதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யாமல், அந்த திட்டத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.” எனத் தெரிவித்திருக்கிறார்.