கிரண் படேல் கைது சம்பவம் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இவரை ஜம்மு காஷ்மீரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கிழக்கு ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 3ஆம் தேதி கைது செய்தனர். இவர் அந்த ஓட்டலில் தன்னை பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி எனக் கூறி தங்கியிருந்தது தான் ஹைலைட்.
மாவட்ட மேஜிஸ்டிரேட் சந்தேகம்
இவரது நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழவே மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவின் பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரை பற்றி போலீசார் விசாரிக்கையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அங்கு இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சென்ற கிரண் படேல் அங்குள்ள மாவட்ட துணை ஆணையரை சந்தித்து தன்னை பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி என்றும்,
காஷ்மீரில் நோட்டம்
வியூக மற்றும் பிரச்சார பிரிவின் கூடுதல் இயக்குநராக பதவி வகித்து வருவதாகவும் கூறியுள்ளார். தெற்கு காஷ்மீரில் உள்ள ஆப்பிள் தோட்டங்களை அடையாளம் காண நியமிக்கப்பட்டிருப்பதாக பொய்யான தகவலை பகிர்ந்துள்ளார். இதையொட்டி சில போலியான ஆவணங்களை காட்டியதாக சொல்லப்படுகிறது. அதை நம்பி ஜம்மு காஷ்மீரில் கிரண் படேலுக்கு புல்லட் ப்ரூப் வாகனத்துடன் கூடிய ’இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய கிரண் படேல்
இவருடன் இரண்டு பேர் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. மூன்று நாட்கள் கழித்து கிரண் படேல் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் எழவே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அதன்பிறகு கைது, விசாரணை, 15 நாட்கள் நீதிமன்ற காவல், குஜராத்தில் தனிப்படை விசாரணை என களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
புல்வாமா எச்சரிக்கை
இதுபோன்ற அலட்சியம் தான் ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீர மரணம் அடைய காரணமாக அமைந்தது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எல்லைப் பகுதி மாநிலத்தில் இப்படி ஒரு மோசடி பேர்வழியை உலவ விட்டது எவ்வளவு பெரிய தவறு. இனிமேலாவது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.