பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
பிரசாந்த் உம்ராவ் குமார் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தார்.
மேலும் ‘பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை’ என கேப்ஷனிட்டு வீடியோ பதிவேற்றம் செய்திருந்தார். இது தொடர்பாக தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வழக்கறிஞர் பிரசாந்த் உம்ராவ் குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “அந்த வீடியோ நான் தயாரித்தது இல்லை. வந்த தகவலையே மீண்டும் ஃபார்வேர்ட் செய்துள்ளதேன். இதில் எந்த உட்கருத்தும் இல்லை. நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என கூறியிருந்தார். முந்தைய விசாரணையின் போது, “மனுதாரரது ட்வீட்டின் காரணமாக தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழலும், பதட்டமான சூழலும் ஏற்பட்டது. ஆகவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நீதிபதி இளந்திரையன் உத்தரவை வெளியிட்டார். அதில், “பிரசாத் உம்ராவ் குமாருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். 15 நாட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். மனுதாரர் இது போன்ற வேறு ஏதும் குற்ற சம்பவத்திலாவது மேற்கொண்டு ஈடுபட்டால் முன் ஜாமினை ரத்து செய்து உடனடியாக காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கலாம்” என கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM