புதுடெல்லி: ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்களின் அமளியால் நாடாளுமன்றம் 6வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. ெதாடர்ந்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற முதல் தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று எதிர்கட்சிகளும், லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டாவது அமர்வின் 6வது நாள் கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற அலுவல்களை நடத்துவது அரசின் கடமையாகும். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தைப் பேச ஒன்றிய அரசு அனுமதிப்பதில்லை.
அவைத் தலைவர் எதிர்கட்சி எம்பிக்களின் மைக்கை ஆப் செய்துவிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் ஒன்றிய அரசு சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டுகிறது. ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து கரீபியன் கடல் பகுதியில் சுற்றித் திரியும் நிரவ் மோடி, மெஹூல் சோக்சி பார்த்து கொண்டுதான் உள்ளோம். இந்திய பிரதமர் திறமையற்றவர் என்பதை நாட்டின் சாமானிய மக்களும் அறிவார்கள். அவர்கள் (பாஜக) ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியை பலவீனமானது என்றும் கோழைத்தனமானது என்றும் கூறினர். ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதி தாவூத் இப்ராகிமை இந்தியா கொண்டு வருவோம் என்றும் கூறினர். ஆனால் ராகுல் காந்தியை அவதூறு செய்வதிலேயே அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார். அதேபோல் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘இன்றைய இந்திய அரசியலின் மீர் ஜாபர் ராகுல்காந்தி.
இந்தியா குறித்து அவர் இங்கிலாந்தில் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அப்போது ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முந்தைய கோரிக்கைகளின் அடிப்படையில் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து நாடாளுமன்றத்தின் முதல் தளத்திற்கு சென்ற எதிர்கட்சி எம்பிக்கள், அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கோரி போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் விடுத்த அழைப்பின் அடிப்படையில், காலை 11.30 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை தலைவரின் அறையில் நடைபெற்றது. அப்போது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால், வரும் நாட்களில் அவை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன.