புதுடெல்லி: கட்சியின் இளம் தலைவர் கன்னய்யா குமாருக்கு டெல்லியில் முக்கியப் பதவியை அளிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழக (ஜேஎன்யு) மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரான இவரிடம் டெல்லி மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி செய்திருந்தது. இக்கட்சியிடம் இருந்து புதிதாகத் துவங்கிய ஆம் ஆத்மி கட்சியினால் டெல்லி ஆட்சி பறிக்கப்பட்டது. இதை மீட்க தொடர்ந்து இரண்டு முறை முயன்றும் காங்கிரஸால் அது முடியாத நிலை தொடர்கிறது. கடைசியாக 2020-இல் டெல்லியின் 70 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸிற்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில், டெல்லியில் கட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதில், பிஹாரைச் சேர்ந்த இளம் தலைவர் கன்னய்யா குமாருக்கு ஒரு முக்கியப் பதவியை அளிக்கவும் கட்சி திட்டமிடுவதாகத் தெரிகிறது. டெல்லியின் ஜேஎன்யு மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரான கன்னய்யா குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவில் இருந்தவர். பிறகு அக்கட்சியிலிருந்து விலகி 2021-இல் காங்கிரஸில் இணைந்திருந்தார்.
இவருக்கு பிஹார் காங்கிரஸில் முக்கியப் பதவிகள் அளிக்க அக்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காங்கிரஸின் முக்கியக் கூட்டணியான ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் துணை முதல்வரான தேஜஸ்வி பிரசாத் யாதவும் அவரை விரும்பவில்லை எனக் கருதப்படுகிறது. இப்பிரச்சனைகளை சமாளிப்பதுடன், மிகவும் பேச்சுத் திறமை கொண்ட இளம் தலைவர் கன்னய்யாவை பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. எனவே, அவரை டெல்லி மாநில காங்கிரஸின் இளைஞர் பிரிவின் தலைவராக அமர்த்த ஆலோசிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்து பேசும் கன்னய்யாவால், டெல்லியின் இளம் சமுதாயம் கவரப்படலாம் என காங்கிரஸ் எண்ணுகிறது. இதற்கு முன் கட்சியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முன்னிறுத்தியது போல் கன்னய்யாவை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஷீலா தீட்சித், டெல்லியின் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர். அப்போது ஷீலா வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என எழுந்த புகார்கள் அவரது பணியால் அடங்கிவிட்டன. இந்த வகையில், ஷீலாவை போல் கன்னய்யாவை டெல்லியில் முன்னிறுத்தி கட்சியை தூக்கி நிறுத்த காங்கிரஸ் விரும்புகிறது. இதனால், டெல்லியில் அதிகமாக வாழும் பிஹார்வாசிகளை கவர முடியும். இத்துடன், தற்போது டெல்லி காங்கிரஸின் இளைஞர் பிரிவின் தலைவரான பி.வி.ஸ்ரீநிவாஸின் பதவிக் காலமும் நிறைவு பெறுகிறது. எனவே, விரைவில் இதன் மீதான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.