“எங்கள் நரேந்திரரே “தனித்து வா”, 40திலும் தாமரையை மலரச் செய்வோம்” என திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால், பாஜக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ஆளும் திமுக ஆனது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி, மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், அதிமுக கட்சியானது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து வருவதாக சொல்லப்பட்டாலும், இரு கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை முரண்பட்ட கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். இந்த மோதல் கருத்துக்கள் கூட்டணியை சேதப்படுத்துவது போன்ற நிலையையே உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை, பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலை உருவானால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். கட்சியிலும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை மட்டுமே முடிவு செய்யும் எனவும், மாநில தலைவர் முடிவு செய்ய முடியாது என்ற கருத்துக்களும் இடம் பெற்றது.
அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் அளித்த பேட்டியின்போது தெரிவித்திருந்தார். அதிமுக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி மதில் மேல் பூனை என்ற நிலையில் தொடர்வதாகவே தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதிமுகவின் தொண்டர்களும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை விரும்பவில்லை என்றே தெரிகிறது.
இந்தநிலையில், திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் *எங்கள் நரேந்திரரே “தனித்து வா ” நாற்பதிலும் தாமரையை மலர செய்வோம்* என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் சங்கம் திருநெல்வேலி சார்பில் இந்த சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரமுகர்கள் அக்கட்சியை விட்டு விலகி அதிமுகவில் சேர்ந்தது முதல், இரண்டு கட்சிகளின் கூட்டணி இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு, அண்ணாமலைக்கு எதிரான விமர்சனங்கள் என கூட்டணி தொடர்ந்து பலவீனம் ஆகி வரும் நிலையில், தேவேந்திர குல வேளாளர் மக்கள் சங்கம் ஒட்டியுள்ள சுவரொட்டியால் கூட்டணி மேலும் பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலைக்கு எதிரான பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சுவரொட்டிகள் அவருக்கு ஆதரவானவையாகவே பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM