திருப்பத்தூர் அருகே இறந்த மனைவியின் நினைவாக மனைவியின் ஆறடி தத்ரூப சிலை வைத்து 15 லட்ச ரூபாய் செலவில் கணவர் கோயில் கட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தில் எந்த உறவு சிறந்தது என்றால் அது தாய்ப்பாசம் என்றே எல்லோரும் சொல்வார்கள். ஆம், நிச்சயம் எல்லாவற்றையும் விட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுயிரை கொடுத்து ஒரு உயிரை ஈன்ற தோடு அல்லாமல் அந்த உயிருக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்து கொண்டே இருப்பதால்தான் தாய்ப்பாசம் சிறந்தது என்று சொல்கிறோம். தாய் பாசத்தை போல் தந்தை பாசம் குறித்தும் அனைவரும் நெகிழ்ச்சியாக கூறுவார்கள். ஆனால், இந்த உலகத்தில் சிறந்த உறவுகளில் ஒன்று கணவன் – மனைவி. கணவன் – மனைவி உறவு இன்னும் அதிக அளவில் போற்றப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு தாய் தனது மகனுக்கோ, மகளுக்கோ செய்கிறார்கள் என்றால் அது ரத்தப் பாசம். ஆனால், இரு வேறு உயிர்கள் நீண்ட காலம் வேறு வேறு சூழலில் வாழ்ந்து பின்னர் ஒரு கட்டத்தில் இணைந்து தங்களது வாழ்க்கையை இறுதி மூச்சு வரை வாழ்வதுதான் தாம்பத்ய பந்தம். இந்த உலகத்தில் அதிக உரிமையோடும் எவ்வித தடையும் இன்றி தயக்கமும் இன்றி ஒருவருக்குகொருவர் பேசிக் கொள்ள முடியும் என்றால் அது கணவன் மனைவி இடையில்தான் சாத்தியம். இப்படியான கணவன் – மனைவி உறவை நெகிழ வைக்கும் வகையில் திருப்பத்தூர் ஓர் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இப்படியெல்லாமா நடக்கிறது என ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு இந்த நிகழ்வு உள்ளது.
35 ஆண்டு கால திருமண வாழ்க்கை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தக்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிறது. இந்த இனிய தம்பதிகளுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஈஸ்வரி இயற்கை மரணம் அடைந்தார்.
மனைவிக்காக கோவில் கட்டிய கணவர்!
மனைவி இறந்ததால் வேதனையடைந்த சுப்பிரமணி அவருக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் மனைவி ஈஸ்வரியின் 6 அடி உயர சிலையை நிறுவி கோயில் கட்டி தினமும் காலை, மாலை என பூஜை செய்து வருகிறார்.
முதலாமாண்டு நினைவு நாள்!
வருகின்ற 31ஆம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து வருவதாக கூறுகின்றனர். இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவருவது அப்பகுதி மக்களிடையே வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM