அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், இந்தியாவில் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அடுத்தடுத்த திவாலான வங்கிகள்!
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வங்கியான ‘சிக்னேச்சர்’ வங்கி (signature bank) மூடப்பட்டது. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் (first republic bank) மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரிந்தது கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்குகள்!
கடந்த ஒரு வாரத்தில் இப்படி பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அமெரிக்க வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 3 வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியது. பணப்புழக்க பிரச்சினையில் சிக்கியதை அடுத்து அவ்வங்கி மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. கிரெடிட் சூயிஸ் வங்கியை, போட்டி நிறுவனமான UBS வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவிலும் தாக்கம் இருக்குமா? – வாடிக்கையாளர்கள் அச்சம்!
சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வங்கியே திவால் நிலைக்கு சென்றுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை, உலகின் மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக, இந்திய வங்கிகள் குறித்தும் பலரும் அஞ்சுகின்றனர். ஏனெனில் இந்தியாவிலும் வங்கி திவால் ஆன அனுபவங்கள் இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த நம்பிக்கை!
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியே நம்பிக்கை தந்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இப்போது உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. மேலும் வங்கி அமைப்பும் வலுவாக இருக்கிறது. இதுவே நமது அமைப்புகளின் பலம்” என தெரிவித்துள்ளார்.
அதுபோல் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “தற்போது இந்திய வங்கி துறை நிலையாக இருக்கிறது. சர்வதேச வங்கி துறையில் நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய வங்கி துறை பாதிப்படையவில்லை” என நம்பிக்கை அளித்துள்ளார்.
இந்திய வங்கிகள் நிலையாகவே இருக்கிறது!
இந்த மாத தொடக்கத்தில் சிலிக்கான் வேலி வங்கி (SVB) திவாலானதில் இருந்து நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் (.NSEBANK) 5.3 சதவிகிதம் குறைந்துள்ளது. இது அமெரிக்க வங்கிக் குறியீட்டில் கிட்டத்தட்ட 18 சதவிகிதம் வீழ்ச்சியுடன் ஒப்பிடப்பட்டது. இருப்பினும், இந்திய வங்கிகள் நிலையாக இருக்கின்றன என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இந்திய நிதித்துறை கடந்த மூன்று ஆண்டுகளில் யெஸ் பேங்க் (YESB.NS) உட்பட பெரிய திவால்நிலைகளைக் கண்டுள்ளது, ஆனால் கடன் வழங்குபவர்கள் மோசமான கடனைக் குறைத்து மூலதனத்தை உயர்த்தி, வலுவான நிலையில் வைத்துள்ளனர்.
டிசம்பர் மாதம் நிதி நிலைத்தன்மை அறிக்கையின்படி, (FSR) ’எப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலைகளிலும் இந்திய வங்கிகள் குறைந்தபட்ச மூலதனத் தேவைகளுக்கு இணங்க முடியும் என்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதிமுறைகளின்படி, வங்கிகள் குறைந்தபட்ச மூலதனத்திலிருந்து சொத்துகளின் விகிதத்தை (சிஆர்ஏஆர்) தொடர்ந்து 9% பராமரிக்க வேண்டும். டிசம்பரில் வெளியிடப்பட்ட சமீபத்திய RBI தரவுகளின்படி, இந்திய வங்கிகளின் CRAR மற்றும் Common Equity Tier 1 (CET1) விகிதம் செப்டம்பர்-இறுதியில் முறையே 16% மற்றும் 13% ஆக இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM