பாஜக தனித்துப் போட்டி? வா வா என்று கூப்பிடும் தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம்!

அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா, விலகுமா என்று தமிழக அரசியல் அரங்கில் பட்டி மன்றமே நடந்து வருகிறது. பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்றும் அக்கட்சி வட்டாரத்துக்குள் பேச்சு நிலவுகிறது. இந்த சூழலில் பாஜக 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுமாறு தேவேந்திர குல வேளாளர் சங்கம் என்ற பெயரில் நெல்லையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழக பாஜகவில் 2024 சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதாலும் இளைஞர் என்பதாலும் அண்ணாமலையின் பேச்சை கேட்க கூட்டம் கூடியது. அவரும் எதிர்கட்சி தலைவர்கள் குறித்து வெளிப்படையாக சர்ச்சையான வார்த்தைகளுடன் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

அண்ணாமலையை வைத்து எளிதில் தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விடலாம் என அக்கட்சி மேலிடம் திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சமீக்காலமாக அண்ணாமலையின் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் நடவடிக்கையை பிடிக்காமல் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்ள அதிமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு உதாரணாமாக, தனித்து போட்டியிடுவது குறித்து அண்ணாமலை பேசி வருகிறார். மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவி விலகுவேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவாதமாக மாறியது. பதிலுக்கு அதிமுக நிர்வாகிகளும் பாஜகவின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அதிமுக பாஜக இடையேயான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதுபோன்ற சூழலில் நெல்லை மாநகரில் தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், எங்கள் நரேந்திர்ரே தனித்து வா தாமரையை தமிழகத்தில் 40ம் மலரச் செய்வோம் என மோடிக்கு இணையாக அண்ணாமலையை ஒப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகளவு இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டணி தொடர்பாக பல்வேறு கருத்துகள் பகிரப்படும் நிலையில் நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.