பெங்களூரு: இந்துத்துவா குறித்து ட்வீட் செய்த கன்னட நடிகர் கைது

பெங்களூரு: “பொய்களால் கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவா” என ட்வீட்டில் கருத்துப் பதிவு செய்த கன்னட சினிமா நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பெங்களூரு மாநகர போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத உணர்வை புண்படுத்தியதாக நடிகர் சேத்தன் குமார் மீது சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதாகி உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். அவர் பதிவு செய்த ட்வீட்டின் விவரம்:

“பொய்களால் கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவா.

சாவர்க்கர்: ராமர், ராவணனை தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோதே இந்திய ‘தேசம்’ தொடங்கியது —> ஒரு பொய்

1992: பாபர் மசூதி ‘ராமர் பிறந்த இடம்’ —> ஒரு பொய்

2023: ஊரிகவுடா – நஞ்சேகவுடா திப்புவை கொலை செய்தவர்கள் —> ஒரு பொய்

இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும் —> உண்மை என்பது இங்கு சமத்துவம்” என்று அவர் ட்வீட் செய்திருந்தார். நேற்று காலை அவர் இந்த ட்வீட்டை செய்திருந்தார். இந்நிலையில், இந்த ட்வீட் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருபவர் சேத்தன் குமார். ‘காந்தாரா’ படம் குறித்து மோசமான விமர்சனத்தை அவர் முன்வைத்திருந்தார். ஹிஜாப் வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியையும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என கடந்த ஆண்டு சொல்லி இருந்தார் அவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.