காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாணவியின் பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை செய்ததில், மாணவி கோவிந்தவாடி அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் நெருங்கி பழகி வந்தது தெரிய வந்தது.
இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே இவர் புள்ளலூர் கிராமத்திற்கு அடிக்கடி சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் மாணவியுடன் நெருங்கி பழகியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் லோகநாதனை கைது செய்து, மாணவியின் கர்ப்பம் தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுப்பதாக போலீசார் ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.