கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தனது மகளை காதல் வலையில் வீழ்த்தி , எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞரை, மாணவியின் தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறி உள்ளது.பட்டப்பகலில், பலபேர் முன்னிலையில் ஆட்டை பலி கொடுப்பது போல நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கிருஷ்ணகிரி – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையையொட்டிய சர்வீஸ் சாலையில், டேம் ரோடு பகுதியில் இரு சக்கரவாகனத்தில் சென்ற ஒரு இளைஞரை விரட்டிச்சென்ற 3 பேர், அவரை மடக்கிப்பிடித்து, ஆடுகளை பலியிடுவது போல கழுத்தில் குத்தியும் அறுத்தும் கொடூரமாக கொலை செய்தனர்

பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர கொலையை தடுக்க இயலாமல் பலரும் அச்சத்துடன் விலகி நிற்க, சிலர் தங்கள் செல்போனில் அதனை படம்பிடிப்பதை பார்த்து, கொலையாளிகள் அவர்களை எச்சரித்துவிட்டு இரு சக்கரவாகனத்தில் தப்பிச்சென்றனர்…

கொல்லப்பட்டவர் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெகன் என்ற டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி என்ற தகவல் வெளியானதும், சம்பவ இடத்தில் திரண்ட கொல்லப்பட்ட இளைஞரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது..

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கைப்பற்றி நடத்திய விசாரணையில் தங்கள் வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்வீட்டார் ஜெகனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர்… இவரது மகள் சரண்யா கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி சென்று வந்த மாணவி சரண்யாவை ஜெகன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததால், சங்கர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இவர்களை கண்டித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்லூரிக்கு சென்ற சரண்யாவை அழைத்துச்சென்ற ஜெகன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஜெகன் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்ததால், சங்கர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. கல்லூரிக்கு செல்லும் தந்து மகளுக்கு இப்போதைக்கு திருமணம் தேவையில்லை என்று எச்சரித்த நிலையில், எதிர்ப்பை மீறி தனது மகளை வீட்டிலிருந்து கூட்டிச்சென்று திருமணம் செய்ததால், ஜெகன் மீது உண்டான ஆத்திரத்தில் சங்கர் தனது உறவுக்கார இளைஞர்களை அழைத்து வந்து கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சராஜ் குமார் தாகூர், துணை கண்காணிப்பாளர் தமிழரசி ஆகியோர் உறவினர்களிடம் சமாதானமாக பேசியதன் அடிப்படையில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கொல்லப்பட்ட ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே கொலை வழக்கில் தேடப்பட்ட சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க சாதி மட்டுமே காரணமாக இருப்பதில்லை என்பதற்கு, இந்த படுகொலைச் சம்பவமும் மற்றொரு சான்று….

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.