புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளை பதிவிட்ட கனடா எம்பி உள்ளிட்ட பலரது டுவிட்டர் கணக்கை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. பஞ்சாபில் ‘காலிஸ்தான்’ ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு சமூக ஊடகங்களின் மூலம் காலிஸ்தான் ஆதரவு பதிவுகளை வெளியிட்டு வருவோரை ஒன்றிய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. மேலும் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரிவினைவாதிகள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வரிசையில், காலிஸ்தான் ஆதரவு டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு விஷமத்தனமான கருத்துகளை பதிவிட்டு வரும் டுவிட்டர் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கனடா நாட்டின் எம்பியும், புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங்கின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இவர் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்தார். அவரது கணக்கு முடக்கப்பட்ட விஷயத்தை கனடா அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா கவிஞர் ரூபி கவுர், யுனைடெட் சீக்கிய அமைப்பின் நிர்வாகி குர்தீப் சிங் சஹோதா ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன’ என்று தெரிவித்தன.