புதுடெல்லி: அமலாக்கத்துறையும், சிபிஐயை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களைப் பின்தொடரும் மத்திய அரசு, நாட்டிலிருந்து தப்பியோடியவர்களுக்கு சலுகை காட்டிவருவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இன்டர்போலின் ரெட் நோட்டீஸ் பட்டியலில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக கார்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வைர வியாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளருமான மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அவர் மீது இன்டர்போல் கடந்த 2018 ஆம் ஆண்டு ரெட் நோட்டீஸ் வழங்கியது. இந்தநிலையில் இன்டர்போலிற்கு அவர் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது பெயர் ரெட் நோட்டீஸ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,”எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை. மோடி ஜியின் மெகுல் பாய்-க்கு இன்டர்போலில் இருந்து விடுதலை. சிறந்த நண்பருக்காக நாடாளுமன்றம் முடக்கப்படும் போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தலைமறைவான பழைய நண்பருக்கு எப்படி உதவாமல் இருக்க முடியும்” என்று இந்தியில் தெரிவித்துள்ளார். மேலும் “நாடு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இழந்துள்ளது. “நா கானே டுங்கா” மற்றொரு சொல்லாட்சியாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையும்,மத்திய புலனாய்வு அமைப்பும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிகவும் தீவிரமாக பின்தொடரும் நிலையில், தேடப்படும் ஒரு வைரவியாபாரிக்கு அவர்கள் சலுகை அளித்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரெட் நோட்டீஸ் பட்டியலில் இருந்து சோக்சியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது, அவர் ஆன்டிகுவாவில் தங்கியிருந்த போது, தான் கடத்தப்பட்டதாக சாட்டிய குற்றத்தினை நிரூபிப்பதாக உள்ளதாக சோக்சியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.