திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா எரும்பி கிராமத்தில் வசித்து வந்தவர் வள்ளியம்மாள் (85). கணவர் இறந்த நிலையில், 3 பிள்ளைகளும் உயர் பதவிகளில் சென்னையில் செட்டிலாகிவிட, வள்ளியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். எப்போதும் கழுத்தில் தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்கள், காதில் தங்க கம்மல் ஆகியவற்றை அணிந்தபடி இருந்த மூதாட்டி, இன்று அதிகாலை கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு வீட்டில் இறந்துகிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், வினோத்குமார் ஆகிய இரண்டு இளைஞர்களை ஆர்.கே.பேட்டை போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
போதைக்கு அடிமையான சதீஷ், வினோத்குமார் இருவரும் மூதாட்டிக்கு யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு உறுதிசெய்திருக்கின்றனர். மூதாட்டியிடம் இருக்கும் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி, அதிகாலை ஒரு மணி அளவில் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அவரைச் செங்கல்லால் கடுமையாக மண்டையில் தாக்கியிருக்கின்றனர். அதன் பிறகு இருவரும் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் கழுத்தை அறுத்து மூதாட்டி வள்ளியம்மாளைக் கொடூரமான முறையில் கொலைசெய்துவிட்டு, அவர் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி, காதிலிருந்த தங்க கம்மல், 4 தங்க வளையல்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.
கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு, அருகிலுள்ள பகுதியில் இருவரும் தலைமறைவாக இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரையும் செல்போன் சிக்னல் உதவியுடன் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், “நகைக்காகத்தான், மூதாட்டி வள்ளியம்மாளைக் கொலைசெய்தோம்” என்று கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து, இவர்களிடமிருந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில் இவர்கள் 15 சவரன் தங்க நகைகள் என்று நினைத்து திருடியது அனைத்தும் போலியான நகைகள் எனத் தெரியவந்தது. மூதாட்டியின் காதிலிருந்த 6 கிராம் கம்மல் மட்டுமே தங்கமாக இருந்திருக்கிறது. தற்போது சதீஷ், வினோத்குமார் ஆகிய இருவரையும் மூதாட்டியைக் கொலைசெய்த குற்றத்துக்காக வழக்கு பதிவுசெய்து ஆர்.கே.பேட்டை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.