ஆர்எஸ்எஸ்-ன் வளர்ச்சியைக் கண்டு திருமாவளவன் பயந்துவிட்டார் என்று, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது குமாரசாமி தெரிவித்தாவது, “ஆன்லைன் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.
இதில், நம் தமிழகத்தில் மட்டும் 4,848 பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம் புதிய எழுச்சி பெற்றுள்ளது.
குறிப்பாக தலித் மற்றும் கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ்-ன் வளர்ச்சி திருமாவளவனை அச்சப்படவைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து திருமாவளவனை நேரில் சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளோம்.
ஒரு சில இந்து விரோத சக்திகள் தூண்டுதலின் பேரில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தக் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை நாங்கள் உடைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த சேவையை தரக்கூடிய, மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரி வித்யாலயா பள்ளியை தமிழகத்தில் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதற்கு முழு காரணம் தமிழக அரசு தான்” என்று தெரிவித்தார்.