மேட்டுப்பாளையம்: பிரதமருக்கு ஆசி வழங்கி கோவை தேக்கம்பட்டி கிராமத்திற்கு திரும்பிய பாப்பம்மாள் பாட்டிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஐக்கிய நாடுகள் சபை 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. இதையொட்டி, டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு தானிய மாநாடு நடந்தது.
இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்த இயற்கை விவசாயியான பாப்பம்மாள் பாட்டிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி இயற்கை ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற, 107 வயதுடைய பாப்பம்மாள் பாட்டியிடம் நலம் விசாரித்ததோடு, அவரது காலில் திடீரென விழுந்து ஆசியும் பெற்றார். இதையடுத்து பாட்டியிடம் சற்று நேரம் பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. இந்நிலையில், சிறுதானிய மாநாடு முடிந்து டெல்லியில் இருந்து தேக்கம்பட்டி திரும்பிய பாப்பம்மாள் பாட்டிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தந்தனர்.
இது குறித்து பாப்பம்மாள் பாட்டி கூறுகையில், ‘‘இம்மாநாட்டின் போது, நான் நன்றி தெரிவிக்கவே அங்கு சென்றேன். பிரதமர் மோடி திடீரென என் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், நம் நாட்டின் பிரதமர் மோடி என் காலில் விழுவார் என நினைக்கவில்லை. இந்த நிகழ்வு தனக்கு பெருமை அளிப்பதாக இருந்தது,’’ என பெருமிதத்துடன் தெரிவித்தார்.