காஞ்சிபுரம், கண்ணப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் காஞ்சிபுரம், ரங்கசாமி குளம் பகுதியில் ஆதிநாராயணா ஹார்டுவேர்ஸ் என்ற கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி, சுப்ரஜா, மகன், மகள் எனக் குடும்பமாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார்.
சுற்றுலாவை முடித்துவிட்டு, இன்று வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சத்தியமூர்த்தி வீட்டின் முன்பக்க கதவை மர்மநபர்கள் உடைத்திருந்தனர். உடனடியாக இது குறித்து காஞ்சிபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்க நகைகள், ஐந்து கிலோ வெள்ளிப் பொருள்கள், ஐந்தரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து , கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள். மேலும், அங்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கும் பணியும் நடைபெற்றது.
தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.