லக்னோ: உயிர் பயத்தால் தலைமறைவாக இருந்த ரவுடி, காவல் நிலையத்தில் சரணடைந்தான். கழுத்தில் பதாகையுடன் சரணடைந்ததால் அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதும், கடுங் குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளுவதும், அவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கையால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பீதியில் உறைந்துள்ளனர். அதேநேரம் முதல்வரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஷாசாத் என்பவன், மண்டி காவல் நிலையத்திற்கு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மேந்திர சிங் முன்பு கைகூப்பி நின்று சரணடைந்தான். அவன் தனது கழுத்தில் ஒரு பதாகையை மாட்டியிருந்தான்.
அதில், ‘எதிர்காலத்தில் எந்தக் குற்றமும் செய்யமாட்டேன். அதையும் மீறி ஏதேனும் குற்றம் செய்தால் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதையடுத்து அவனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து நகர எஸ்பி அபிமன்யு மங்லிக் கூறுகையில், ‘மான்சா காலனியில் வசிக்கும் ரவுடி ஷாசாத் மீது வழிப்பறி, திருட்டு, கொலைவெறி தாக்குதல், போதை பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், திருட்டு உள்ளிட்ட 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை பல மாதங்களாக தேடி வந்தோம். தலைமறைவாக சுற்றித் திரிந்த அவன் தற்போது சரணடைந்துள்ளான்’ என்றார்.