காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத்தொடரை மையமாக வைத்து நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கனை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுகளிலும், நம் வட மாநிலங்களான புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத் தொடரில் இருந்து தென் கிழக்கே 40 கி.மீ., தொலைவில் ஜுர்ம் என்ற நகரம் உள்ளது.
30 நொடிகள்
இது, பாகிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ளது. இந்த இடத்தை மையமாக வைத்து, நேற்று இரவு 10:17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து, 184 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30 நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால், உயிரிழப்பு, பொருள் சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாக வில்லை.
ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் மிகப் பெரிய அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டது.
அசாதாரணமான சூழல்
வட மாநிலங்களான புதுடில்லி, உ.பி.,யின் நொய்டா, காஜியாபாத், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நொடிகள் வீட்டில் இருந்த மின் விசிறி, அலங்கார விளக்குகள் குலுங்கின, சில இடங்களில் பொருட்கள் கீழே விழும் அளவுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள், கட்டடங்களில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி சாலையின் மையப்பகுதிக்கு வந்தனர்.
ஆப்கன் நிலநடுக்கம் குறித்து உடனடியாக தகவல் தெரியாததால் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் அசாதாரணமான சூழல் நிலவியது. சில மணி நேரம் கழித்து மக்கள் வீடுகளுக்குள் சென்றனர்.
ஆப்கானிஸ்தானில், 2005ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 74 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்