புவனேஸ்வர், ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோவிலில் எலி தொல்லைக்காக பொருத்தப்பட்ட எலி விரட்டும் இயந்திரம், கடவுளின் துாக்கத்தை கெடுப்பதாக பூசாரிகள் குற்றஞ்சாட்டியதால், அந்த இயந்திரம் அகற்றப்பட்டது.
வாய்ப்பு
ஒடிசாவின் புரியில், 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகன்நாதர் கோவில் உள்ளது.
இங்கு, எலி தொல்லை மிக தீவிரம் அடைந்துஉள்ளது. எண்ணில் அடங்காத எலிகள் கோவில் முழுதும் சுற்றி வந்து அசுத்தம் செய்கின்றன; சுவாமிக்காக நெய்யப்பட்ட ஆடைகளை கடித்து குதறி கிழித்து விடுகின்றன.
இதே நிலை நீடித்தால், மரத்தாலான சுவாமி சிலைகளை எலிகள் கடித்து சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் கவலை தெரிவித்தனர்.
அங்கு, பொறி வைத்து எலிகளை பிடித்து, அவற்றை வெளியே சென்று விடும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
கோவில் வளாகத்திற்குள் எலிகளை மருந்து வைத்து கொல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில் எலிகளை விரட்டும் இயந்திரத்தை, பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகத்துக்கு நன்கொடையாக அளித்தார்.
மின்சாரத்தில் இயங்கும் இந்த இயந்திரம், ‘அல்ட்ராசானிக்’ ஒலியை எழுப்புகிறது. இந்த சத்தம் எலிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதால், அந்த இடத்தில் இருந்து அவை வெளியேறுகின்றன. இந்த இயந்திரம், ஜெகன்நாதர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே இயந்திரத்தை அகற்றும்படி பூசாரிகள் குரல் கொடுக்கத் துவங்கினர்.
துாக்கம் கெடும்
காரணம் கேட்டால், அந்த இயந்திரத்தில் இருந்து வெளியாகும் ஒலி, புரி ஜெகன்நாதரின் துாக்கத்தை கெடுத்துவிடும் என அவர்கள் கூறியதால், வேறு வழியின்றி அந்த இயந்திரத்தை கோவில் நிர்வாகத்தினர் அகற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்