பஞ்சாப்: காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியர்களுக்கென தனிநாடு அமைப்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் தப்பித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த நான்கு நாட்களாக பஞ்சாப் முழுவதும் அம்மாநில காவல்துறை தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடிவரும் நிலையில், தப்பித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கிய சனிக்கிழமை காலை 11.27 மணியளவில் ஜலந்தரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மாருதி காரில் தப்பித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன.
முன்னதாக, மெர்சிடிஸ் எஸ்யூவியில் சென்று பின்னரே அந்த மாருதி காருக்கு மாறியுள்ளார். இதன்பின் காரை விடுத்து பைக்கில் தப்பித்துச் செல்கிறார். ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாறும்போதும், பைக்குக்கு மாறும்போதும் தனது ஆடைகளை மாற்றியும் தப்பித்துள்ளார். மதபோதகரான அம்ரித்பால் சிங் வழக்கமாக தான் அணியும் உடை இல்லாமல், மார்டன் உடையில் தப்பித்துச் சென்றிருப்பதால் அவர் பல தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்களை பஞ்சாப் காவல்துறை வெளியிட்டுள்ளது. முன்னதாக அவர் தப்பித்துச் செல்ல உதவிய மாருதி காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வழக்கின் பின்னணி: வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குண்டுதுளைக்காத கோட், துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீது AKF என பொறிக்கப்பட்டுள்ளது. Anandpur Khalsa Fauj என்ற பெயரில் தீவிரவாத அமைப்பை அம்ரித் பால் உருவாக்கி இருக்கலாம் என்றும் அதனை குறிப்பிடும் நோக்கிலேயே AKF என பொறித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, ஆயுத பதுக்கல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அம்ரித்பால் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக புதிதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அம்ரித்பால் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதோடு, அம்ரித்பால் சிங்குக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் மூலம் அம்ரித்பால் சிங் உதவிகளைப் பெற்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அம்ரித்பால் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தப்பியோடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்ரித்பால் சிங்குக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதை அடுத்து, மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையோடு, மத்திய அரசின் அதிரடிப் படையும் குவிக்கப்பட்டுள்ளது.