புதுடில்லி, தவறான வரைபடத்தை பயன்படுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று நடந்த எஸ்.சி.ஓ., நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.
எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு, புதுடில்லியில் வரும் மே மாதம் நடக்க உள்ளது. அதற்கு முன் பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ மருத்துவப் பிரிவு தொடர்பான கருத்தரங்கு, புதுடில்லியில் நேற்று நடந்தது. அதிகாரிகள் நிலையிலான இந்த கருத்தரங்கில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.
இந்த கருத்தரங்குக்கு முன் நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்றது. அப்போது, ஜம்மு – காஷ்மீரை தன் நாட்டின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வரைபடத்தை திருத்த வேண்டும் அல்லது கருத்தரங்கில் பங்கேற்கக் கூடாது என கடுமையாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கருத்தரங்கில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது, ௨௦௨௦ செப்டம்பரில், ‘ஆன்லைன்’ வாயிலாக இது போன்ற ஒரு கூட்டம் நடந்தது.
அப்போதும், பாகிஸ்தான் தவறான வரைபடத்தை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement