சென்னை: காய்கறிகள் பழங்கள், பயிரிடுவதை விவசாயிகளிடையே ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை மூலம் சிறப்பு திட்டங்கள் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும்.
சவ்சவ், பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, 1,000 ஹெக்டேர் பரப்பில் ரூ.2.50 கோடி நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும். டிராகன் பழம், அவகோடா, பேரீச்சை, லிச்சி, மங்குஸ்தான், அத்தி, ஆலிவ் போன்ற சிறப்பு தோட்டக்கலை பயிர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், இந்தாண்டு 1,000 ஹெக்டேரில் பரப்பு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.2 கோடி மத்திய அரசு நிதியில் இருந்து வழங்கப்படும்.
தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைய பழங்களின் உற்பத்தி முக்கியம். எனவே வரும் ஆண்டில் 10 லட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு ரூ.15 கோடி நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும்.