அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதால், கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றுத் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு பாஜக கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலியிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதாவது, தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் என்ற பெயரில் பாஜக கட்சி கொடி கலரில் வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், எங்கள் நரேந்திரரே தனித்து வா என்றும் தமிழகத்தில் தாமரையை 40 இடங்களிலும் மலர செய்வோம் என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகளால் நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் நெல்லை மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.