சாமி, திருப்பாச்சி படங்களில் நடித்த வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல் நிலைகுறித்து சமூக வலைதளங்களில் பரவிய தவறான செய்தியை உண்மை என நம்பி, இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வீட்டில் அவர் உயிரோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறி உள்ளது…
ஹரி இயக்கத்தில் விக்ரமின் சாமி படத்தில் பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த கோட்டா சீனிவாசராவுக்கு, தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கோட்டா சீனிவாச ராவ் குறித்து ஆந்திராவில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான செய்தி ஒன்று பரவியது. இதனை உண்மை என்று நம்பி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக வேனில் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் அவரை கண்டதும் இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அதிர்ந்தனர். இதுபோன்று செய்தி அறிந்து வந்ததாக கூறி திரும்பிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு பல்வேறு உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததால் நொந்து போன கோட்டா சீனிவாசராவ், இது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு தான் இறந்து விட்டதாக வந்த செய்தி வதந்தி என அவர் கூறி உள்ளார்.