15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தைக்கு வந்துள்ள கவாஸாகி நிறுவனத்தின் எலிமினேட்டர் 400 தற்பொழுது ஜப்பானில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளதால் இந்திய சந்தைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜப்பானில் விற்பனையை துவங்கி சில வருடங்களுக்குள்ளே கவாஸாகி தனது க்ரூஸர் ரக மாடலை விற்பனைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.
Kawasaki Eliminator 400
கவாஸாகி வல்கன் S பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற பல்வேறு டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற எலிமினேட்டர் 400 மாடலில் நின்ஜா 400 பைக்கில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த 398cc இன்லைன் பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக பவர் 46.9 bhp at 10,000rpm-ல் வழங்கி 37Nm டார்க்கினை 8,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் சேர்க்கப்பட்டுள்ளது.
உலக மோட்டார் சைக்கிள் சோதனை முறை (WMTC – World Motorcycle Test Cycle) மூலம் மைலேஜ் சோதனையில் எலிமினேட்டர் 400 பைக்கின் எரிபொருள் சிக்கனம் லிட்டருக்கு 25.7 கிமீ ஆகும். 12-லிட்டர் கொள்ளளவு பெற்ற எரிபொருள் டேங்க் வாயிலாக WMTC அறிக்கையின்படி முழுமையாக எரிபொருள் நிரம்பிய டேங்கிற்கு 300 கிமீக்கும் அதிகமான தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
எலிமினேட்டர் 400 சிறப்புகள்
ஜப்பானிய சந்தையில் கவாஸாகி எலிமினேட்டர் 400 ஸ்டாண்டர்ட் மற்றும் SE என இரண்டு மாறுபாடுகளில் கிடைக்கிறது. இரண்டு மாடல்களின் தோற்ற அமைப்பில் மாற்றங்கள் இல்லை. வட்ட வடிவ முழு எல்இடி ஹெட்லைட், குறுகலான ஃபெண்டர்கள், ஒற்றை-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வளைவான எரிபொருள் டேங்க், இரண்டு பிரிவுகளில் வழங்கப்பட்ட இருக்கை, ஒற்றை பக்க ஸ்லாங் எக்ஸாஸ்ட் மற்றும் அலாய் வீல் ஆகியவை கொண்டுள்ளது.
ப்ளூடுத் ஆதரவுடன் கூடிய கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஸ்டைல் டேகோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கடிகாரம், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், எரிபொருள் அளவு, தற்போதைய மற்றும் சராசரி எரிபொருள் சிக்கனம், பராமரிப்பு நினைவூட்டல்கள் மற்றும் அழைப்பு மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகளை பெறலாம்.
டாப் SE வேரியண்டில் கூடுதலாக ஹெட்லைட் கவுல் பேனல், முன் ஃபோர்க் கவர்கள் மற்றும் இரு நிற இருக்கை, மற்றும் கவாசாகியின் முதல் மிட்சுபா சங்கோவா ஜிபிஎஸ் ஆதரவு டிரைவ் ரெக்கார்டர் அமைப்பு மற்றும் USB டைப்-சி பவர் சாக்கெட் உள்ளது.
ஸ்டாண்டர்டு வேரியண்ட் இரண்டு வண்ணங்களில் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக் மற்றும் பேர்ல் ரோபோடிக் ஒயிட், அடுத்து SE பதிப்பு பிளாட் எபோனியுடன் மெட்டாலிக் மேட் கார்பன் கிரே நிறத்தில் மட்டும் கிடைக்கும்.
ட்ரெல்லிஸ் பிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கவாஸாகி எலிமினேட்டர் 400 மாடலின் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் இரட்டை பின்புற ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 310மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை 240மிமீ டிஸ்க் உடன் பாதுகாப்பு சார்ந்த இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது.திந்த மோட்டார் சைக்கிள் 18 அங்குல முன்புற டயர் மற்றும் 16 அங்குல பின்புற சக்கரத்தை பெற்று 130/70 பிரிவு மற்றும் 150/80 பிரிவு என முறையே டியூப்லெஸ் டயர்களில் உள்ளன. பேஸ் வேரியண்ட் 176 கிலோ எடையும், SE மாறுபாடு 178 கிலோ எடை கொண்டதாக வந்துள்ளது.
கவாஸாகி எலிமினேட்டர் 400 விலை
ஸ்டாண்டர்டு எலிமினேட்டர் 400 பைக்கின் விலை 7,59,000 யென் (சுமார் ரூ. 4.71 லட்சம்), டாப் ஸ்பெக் SE வேரியண்ட் 8,58,000 யென் (தோராயமாக ரூ. 5.33 லட்சம்) ஆகும். ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கு சவால் விடுக்கும் இந்த மாடல் 2023 இறுதியில் இந்திய சந்தையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.