புதுச்சேரி அண்ணாசாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 49 லட்சம் ரூபாயை போலீசாருக்கு தகவல் கொடுத்து மீட்க உதவிய மூன்று பேரை, கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டினார்.
புதுச்சேரி அண்ணாசாலை செட்டி தெரு சந்திப்பில் கடந்த வெள்ளி கிழமை காலை பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த டீ கடை உரிமையாளர், ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், அந்த பையை மீட்டு சோதனை செய்தனர். அப்போது அதில், ரூ.49 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார், அந்த பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர், இதைத் தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 50 வயது மதிக்கதக்க ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலை கடக்கும் போது பையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
இந்நிலையில் இந்த பணத்தை மீட்க போலீசாருக்கு தகவல் கொடுத்து உதவிய அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் பாலமுருகன், ஆட்டோ ஓட்டுனர் பாண்டியன் மற்றும் டீக்குடிக்க வந்த வினோத் கண்ணன் ஆகியோரை கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங், மூவரின் நேர்மையை பாராட்டி மூவருக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM