வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தயாராகி வருகின்றன. மத்தியில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர மும்முரம் காட்டி கொண்டிருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 303,
காங்கிரஸ்
52 என வெற்றி பெற்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 353, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்றன.
பாஜக வெற்றி
இதன்மூலம் பாஜக அசுர பலம் பெற்றதை பார்க்க முடிந்தது. அதிலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டவை சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் மக்கள் பாஜக கூட்டணி பக்கமே நின்றனர். குறிப்பாக வட இந்தியாவில் பாஜக அதிகப்படியான இடங்களை கைப்பற்றியிருந்தது. தெற்கில் மாநில கட்சிகளின் ஆதிக்கமே தென்பட்டது. இந்த சூழலில் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து சரியான கூட்டணியை அமைக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன.
பிளவுபடும் எதிர்க்கட்சிகள்
ஏனெனில் மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், நிதிஷ் குமார், சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி என பலரும் தேசிய அரசியலில் தனி முத்திரை பதிக்க விரும்புகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும் என கணக்கு போட்டு காய்களை நகர்த்தி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு கிடப்பது பாஜகவிற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் பேட்டி
இந்நிலையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதன் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கட்சி இந்துத்துவா, தேசியவாதம், மக்கள் நலத் திட்டங்கள் ஆகிய மூன்றையும் தூண்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவற்றில் குறைந்தது இரண்டை முறியடித்தால் மட்டுமே பாஜகவிற்கு சவால் விட முடியும்.
சிந்தாந்தங்களின் கூட்டணி
குறிப்பாக இந்துத்துவா சித்தாந்தத்தை வீழ்த்த காந்தியவாதிகள், அம்பேத்கரிஸ்ட்கள், பொதுவுடைமைவாதிகள், திராவிடர்கள் என பலரும் ஒன்று சேர வேண்டும். பலதரப்பட்ட சித்தாந்தங்கள் கைகோர்த்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும். எதிர்க்கட்சி தலைவர்கள் வெறுமனே சந்தித்து பேசிக் கொண்டால் மட்டும் போதாது. கொள்கை ரீதியாக ஒன்று சேர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வட இந்தியர்கள் திட்டம்
பிரசாந்த் கிஷோர் கூறியபடி அனைத்து சித்தாந்த ரீதியிலான கட்சிகளும் பாரபட்சமின்றி கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் எழுச்சி பெற வேண்டும். இவை பாஜகவிற்கு எதிராக திரள வேண்டும். ஏற்கனவே ராமர் கோயில் விஷயத்தில் வட இந்தியர்கள் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர்.
மீண்டும் பாஜக
இப்படி ஒரு சூழலில் அக்கட்சியை எதிர்ப்பது பெரிதும் சவாலாக மாறியுள்ளது. எனவே தெற்கின் செல்வாக்கை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதோடு, வடக்கிலும் போதிய வியூகம் வகுத்து செயல்பட்டால் பாஜகவை வீழ்த்த வாய்ப்புகள் அதிகம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக நடப்பாண்டு நடக்கும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்கள் முக்கியமான அடித்தளம் போடவிருப்பது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் தற்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் ஒருமுறை பாஜகவிடம் கோட்டை விடக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.