சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸுக்குரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம், குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். தமிழக வனத்துறையின் பராமரிப்பாளர்களால் யானை குட்டிகள் வளர்க்கப்படும் முறையை இந்தப் படம் விவரிக்கிறது.
தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றிவரும் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகிய யானை பராமரிப்பாளர்கள் 6 மாத வயதில் முகாமுக்கு கொண்டு வரப்பட்ட ‘ரகு’ யானைக் குட்டியை எவ்வாறு கவனத்துடன் பராமரித்தனர் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.
மேலும், அதே முகாமில் காப்பாளர்களால் வளர்க்கப்பட்ட மற்றொரு யானை குட்டியான ‘அம்மு’ பராமரிக்கப்பட்ட கதையையும் விவரிக்கிறது.
இந்த ஆவணப்படம் சினிமா துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றுள்ளதுடன், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த ஆவணப்படம் மூலம், யானைகளை பாதுகாப்பது குறித்த தமிழக வனத்துறையின் பணி உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
இதை அங்கீகரிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வனத்துறைக்கு பெருமை ஏற்படுத்தியதற்காக, ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் னிவாஸ் ஆர்.ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக கடந்த மார்ச் 15-ம் தேதி குட்டி யானைகளின் பராமரிப்பாளர்கள் பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
மேலும், முதல்வர் அறிவிப்புக்கிணங்க, தெப்பக்காடு மற்றும் கோழிகமுத்தி யானைகள் முகாம்களில் பணியாற்றும் 91 யானைப் பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.